அரசாங்கத்தை பதவி விலகச் செய்வதற்கான மக்களின் ஆர்ப்பாட்டங்களை புத்துயிர் பெறச் செய்வதற்கு தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்த அமைச்சரவைக்கு தொடர்ந்தும் நாட்டை நிர்வகிக்கும் உரிமை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களைப் பற்றி எவ்வித கவலையும் அற்ற அரசாங்கமே தற்போது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாவலராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் எனவும் அநுரகுமார திஸாநாயக்க சாடியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் மீண்டும் அவர்களின் அரசியல் விளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர்.

எனவே மக்களின் ஆர்ப்பாட்டங்களை மீண்டும் புத்துயிர் பெறச் செய்து, அவர்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமை எதிர்வரும் 26ஆம் திகதி அநுராதபுரத்திலும், 27ஆம் திகதி குருணாகலிலும், 28ஆம் திகதி மாத்தறையிலும், 29ஆம் திகதி களுத்துறையிலும் ஜூலை முதலாம் திகதி அம்பலாந்தோட்டையிலும் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதே போன்று ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

June 23, 2022, 7:15 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X