ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு இன்று ஜெர்மனியில் ஆரம்பமாகிறது.

தெற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மா வில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்திருந்தார்.

இதை ஏற்று கொண்ட மோடி, ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றிரவு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

முன்னதாக இந்திய பிரதமர் தமது பயணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜி7 அமைப்புக்கு தலைமைதாங்கும் நாடு என்ற அடிப்படையில், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஷ் விடுத்த அழைப்பின் பேரில், நான் ஸ்கிளாஸ் எல்மாவோ-வுக்கு பயணம் மேற்கொள்கிறேன் எனவும்,

கடந்த மாதம் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையே நடைபெற்ற ஆக்கப்பூர்வ ஆலோசனைக்கு பிறகு ஜெர்மன் பிரதமர் ஸ்கால்ஸை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய சர்வதேச விவகாரங்களில், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, பிற ஜனநாயக நாடுகளான அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த உச்சிமாநாட்டின் பல்வேறு அமர்வுகளின் போது, சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், தீவிரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்து அவர் கருத்து வெளியிடவுள்ளார்.

இதேவேளை, இந்திய பிரதமர் மோடி ஜூன் 28ந் திகதி அபுதாபி சென்று ஐக்கிய அரபு எமிரேட்சின் மன்னரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யான் மறைவையொட்டி, தற்போதைய மன்னரும், அதிபருமான ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்தித்து நேரில் இரங்கல் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

June 26, 2022, 8:23 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X