2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், காலம் தாழ்த்தப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு முற்பகுதியில் நடத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத்திட்டத்தின் ஒதுக்கீடு போதுமானதாக இருப்பதால், தேர்தலுக்கான அனைத்து தயார்ப்படுத்தல்களும் முடிந்தவுடன் உள்ளுராட்சி தேர்தலை விரைவில் நடத்த முடியும். எங்களுக்கு எந்தவிதமான நிதிப் பிரச்சனையும் இல்லை என்றும் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 31 ஆம் திகதி 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கைச்சாத்திட்டதையடுத்து, அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் குழுவும் தங்களுடைய பணிகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

எனினும், அரசியலமைப்பு பேரவையினால் புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர்களை நியமிக்கும் வரை, சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்தும் தங்களுடைய வழமையான தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் படி, தேர்தல் நடத்தப்பட்டு, 2023 மார்ச் 30 ஆம் திகதிக்கு முன் 340 உள்ளூராட்சி மன்றங்களும் நிறுவப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

யோ. தர்மராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X