பசுமைதமிழ் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக தமிழ்FM இன் தலைமை அதிகாரியுடன் தமிழ்மிரர் நேர்காணல்.

00
parani2

 

TM_14 (002)

உலக சுற்றாடல் தினத்தினத்தன்று ஆரம்பிக்கப்பட்ட “பசுமை தமிழ்” நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக  தமிழ்FM இன் தலைமை அதிகாரி மு.பரணிதரனின் பேட்டி

“உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, சமகாலத்தில் பாரிய பிரச்சனையாக எழுந்துள்ள விடயமான சுற்றாடல் மாசுறல் பற்றிய வெவ்வேறு விடயங்களை, சிறியளவிலும் பாரியளவிலும் கவனத்தில் கொண்டு எம்மாலான பங்களிப்பை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம். இதற்காக எமது அறிவிப்பாளர்களும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கிருக்கும் நேயர்களோடும் நற்பணி மன்றங்கள் போன்ற பொது அமைப்புகளோடும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.”

“உலக சுற்றாடல் தினத்தையொட்டி, அன்றைய தினத்தில் மட்டும் மரங்களை நாட்டிவிட்டு, அது தொடர்பில் பிரச்சாரப்படுத்தி விளம்பரம் தேடுவோரை நாம் கடந்த காலங்களில் பார்த்திருந்தோம். மரக்கன்றுகளை நாட்டுவதுடன் அவர்களின் பணி முடிந்துவிடும், ஆனாலும், பராமரிப்பது பற்றி எவ்விதமான கவனமும் செலுத்தப்படுவதில்லை. நீரூற்றுவார் யாருமில்லை. இதனால் இந்த திட்டங்கள் வெற்றியளிக்காமல் நிறைவடைந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது. நாம் அவ்வாறில்லாமல், நாம் இயங்கும் சமூகத்தில் நிலைபேறான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை நடுவதுடன், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.”

“குறிப்பாக நேற்றைய தினம் (5) லிந்துலை, ரோயல் கல்லூரி ஆரம்பப் பாடசாலையில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், மரக்கன்றுகள் நடும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்த மரங்களை பராமரிக்கும் செயற்பாடுகளை எதிர்காலத்தில் அந்த பாடசாலையின் மாணவர்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதுடன், நற்பணி மன்றத்தினரும் பங்களிப்பு வழங்குவர்.”

“இந்த திட்டத்தை நாம் வன்னியிலும் முன்னெடுக்கவுள்ளோம். வருடம் முழுவதும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இந்த மரம் நட்டு பராமரிக்கும் திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். மர நடுகை பராமரிப்பு செயற்பாடுகளுக்கு மேலதிகமாக பிரதான அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மீன் பிடிவலை பயன்படுத்தல் தொடர்பில் மீனவர்களுக்கு

தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். குறிப்பாக பாரிளவிலான வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தலில் ஈடுபடும் போதுமீன் வளம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை தவிர்ப்பது தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளதுடன், டைனமைட்கள் வெடிக்க வைத்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை தவிர்ப்பது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.”

“டெங்கு நோய் ஒழிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பாடசாலைகளை மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் மத்தியில் போட்டி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் அதிகளவு பங்களிப்பு செலுத்திய மாணவர்கள் பாடசாலை மட்டத்திலும் ,வலய மட்டத்திலும் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம்.”

“டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு பொதுச் சுகாதார மேற்பார்வை அதிகாரிகள் வீடுகளுக்கும்,வியாபார ஸ்தானங்களுக்கும் விஜயம் செய்கின்றனர். இவர்களின் செயற்பாட்டை மேலும் வினைத்திறனாக்கும் வகையில் நாம் புதிய திட்டமொன்றை அவர்களுடன் இணைந்து அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளோம். அவர்கள் ஒவ்வொரு தடவை விஜயம் செய்யும் போதும் கண்காணிக்கும் விடயங்களை குறித்து வைக்கக்கூடிய வகையிலான ஸ்டிக்கர்களை குறித்த பகுதிகளில் ஒட்டவுவுள்ளோம்.”

“வன்னி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் பல இடங்களில் கிணறுகள் கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றன. இவற்றை தகர்த்து, டெங்கு பரவுவதை தவிர்ப்பது மற்றும் நிலக்கீழ் நீர் மாசடைதலை தவிர்ப்பது போன்ற செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்”

“இலத்திரனியல் கழிவுகள் என்பது சூழலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியன. இவற்றை வேறாக சேகரிப்பதற்காக நாம் கொழும்பிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் காணப்படும் அங்காடிகளில் கழிவு அகற்றும் வாளிகளை வைக்க திட்டமிட்டுள்ளோம். இவற்றை சேகரித்து தனியார் நிறுவனங்கள் மூலமாக அழிப்பதற்கு அல்லது மீள்சுழற்சிக்குட்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கவுள்ளோம். இந்த கழிவுகளை வேறுபடுத்தி அகற்றுவது தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம்.”

“மலையகத்தைச் சேர்ந்தவர்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது அவற்றில் இரசாயனம் இன்றிய பசளைகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்த தீர்மானித்துள்ளோம். இந்த செயற்பாட்டை பின்பற்றுவதன் மூலமாக ஆரோக்கியமான விளைச்சல்களை நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்பதுடன், பொருளாதார ரீதியிலும் உற்பத்தியாளர்கள் அனுகூலங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

0 thoughts on “பசுமைதமிழ் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக தமிழ்FM இன் தலைமை அதிகாரியுடன் தமிழ்மிரர் நேர்காணல்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us