உணவு நெருக்கடியின் காரணமாக யாரும் பசியில் வாடக் கூடாது என்பதே தனது கொள்கையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உணவு நெருக்கடி காரணமாக 4 முதல் 5 மில்லியன் வரையான இலங்கை மக்கள் நேரடியாக பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்ற போதிலும், அதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய உணவு நெருக்கடியைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவானது தமது அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டின் 336 பிரதேச செயலக பிரிவுகளிலும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தனியார் துறையினரின் தலைமையில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மீனவ சமூகத்தினருக்கு உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறும் பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பிராந்திய ரீதியில் போட்டி நிறைந்த சந்தையை உருவாக்கும் நவீன விவசாய முறைக்கான நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டத்தின் அவசியத்தையும் பிரதமர் ரணில் விக்கிமரசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

June 18, 2022, 8:16 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X