ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71வது ஆண்டு நிறைவு விழா இன்று  கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது 1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி கொழும்பு நகர மண்டபத்தில் மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், வருடாந்த மாநாடு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நமது அபிலாஷைகளுக்கு உயிர் கொடுப்போம் – சவாலை ஏற்போம் – சகாப்தத்தின் பணிக்கு தோள் கொடுப்போம் எனும் கருப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் இந்த வருடாந்த மாநாட்டுடன் இணைந்து இன்று கட்சியின் அரசியலமைப்பிலும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்காக சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக் குழுவும் இன்று கூட்டப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் மத்திய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான பிரேரணைகள் மேற்படி குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.

கட்சியின் அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னணியில் கட்சித் தலைவரின் அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நேற்று மத்திய குழுவில் முன்வைக்கப்பட்ட உத்தேச திருத்தங்களில், கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறைவேற்று ஜனாதிபதி இல்லாத பட்சத்தில் கட்சியின் தலைவரை நியமிக்கும் அதிகாரம் கொண்ட நிறைவேற்று சபையின் அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போதைய நிர்வாக சபையின் எண்ணிக்கையை 25ல் இருந்து 35 ஆக உயர்த்த மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், தற்போது உள்ள 4 மூத்த துணைத் தலைவர்களின் எண்ணிக்கையை 7 ஆகவும், 10 துணைத் தலைவர்களின் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

September 2, 2022, 9:01 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X