15 முதல் 20 வீதமான தனியார் பஸ்கள் மாத்திரமே இன்று சேவையில் ஈடுபடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த தொழிற்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தாம் இன்னமும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் புகையிரத திணைக்கள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று பிற்பகல் நெடுஞ்சாலைகள் அமைச்சில் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து தொழிற்சங்கங்கள் தமது பணிப்புறக்களிப்பை நிறுத்திவிட்டு வழமை போன்று நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, அவற்றை உடனடியாக தீர்க்குமாறு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி, புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறையினால் சில புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த முடியாததால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்கும் வகையில் புகையிரத திணைக்களத்தின் வாகனம் மற்றும் போக்குவரத்து சபையிடமிருந்து சில பஸ்கள் பெறப்பட்டு புகையிரத திணைக்கள ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

July 7, 2022, 9:05 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X