2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டு வருவதாக ஜனாதிபதியின் நெருங்கிய அதிகாரி ஒருவர் தமிழ் எப்.எம் செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.

அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நாட்டில் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பெரிதும் பேசப்படுகின்றமை குறித்து வினவிய போதே ஜனாதிபதியின் நெருங்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றன.

எனினும், நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறிய தேர்தல்களை, அடுத்தடுத்து நடத்துவது மேலதிக செலவாக இருக்கும் என்பதாலும், 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துமாறு இந்தியா கொடுக்கும் தொடர் அழுத்தத்தினாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் ஜனாதிபதி கலைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான தேர்தல் முறைமைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவிப்பதோடு, பாராளுமன்றத்திலும் தேர்தல் முறைமைக்கான சட்டமூலத்தையும் நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி, சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளமாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கும் அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவிக்காவிட்டால், பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு, பொதுத்தேர்தலை நடத்துவதற்கும் ஜனாதிபதி ஆலோசனை நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும், அடுத்த மார்ச் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முழு திட்டத்தையும் ஜனாதிபதி முன்னெடுத்துவருவதாக ஜனாதிபதியின் நெருங்கிய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

யோ. தர்மராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X